வித்தாலி பூர்னிக்கா
Vitaly Fournika
http://tawp.in/r/m68
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.(விதாலி ஃபூர்னிக்கா இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)

விதாலி ஃபூர்னிக்கா (Vitaly Fournika, பி. 1940 - இ. 198?) ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு தமிழ் அறிஞர். தமது மறைவுவரை தமிழுக்காக பல தொண்டுகளை ஆற்றியவர். பல தமிழ் நூல்களை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தவர். பல நூல்களையும் எழுதியுள்ளார். சோவியத் மக்களுக்கு தமிழ் மக்களையும் அவர்களது கலை, இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

விதாலி பூர்னிக்கா சோவியத் நாட்டில் உக்ரேனில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். லெனின்கிராட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்தவர்.

தமிழ் மொழியில் ஈர்ப்பு

1965 ஆம் ஆண்டில் ஒரு முறை புத்தகக் கடை ஒன்றில் ரஷ்ய மொழியில் பெயர்க்கப்பட்ட இந்தியக் கவிதை நூல் ஒன்று அவர் கண்களுக்குத் தென்பட்டது. அது மகாகவி பாரதியாரின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூல். பாரதியாரின் சிந்தனைகளாலும் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட விதாலி தனது தொழிலையும் உதறித் தள்ளிவிட்டு லெனின்கிராட் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவில் மாணவனாகச் சேர்ந்தார். செம்பியன் என அறியப்பட்ட சோவியத் அறிஞர் சிம்யோன் நூதின் அவர்களிடம் பயிற்சி பெற்றுப் பின்னர் சென்னப் பல்கலைக்கழகத்தில் முனைவர் மு. வரதராசனிடம் பயின்றார். தமிழகப்பித்தன் என்று புனைபெயரும் வைத்துக் கொண்டார்.

தமிழில் கலாநிதி பட்டம்

சோவியத் விஞ்ஞான பேரவையின் அநுசரணையில் இயங்கிய மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் கலாநிதி பட்டம் பெற்றார். தமது கலாநிதிப் பட்ட ஆய்விற்காக தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் ஜெயகாந்தனின் படைப்பிலக்கியம் முதலானவற்றைத் தமது ஆய்விற்காகத் தேர்ந்தெடுத்தார்.  நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினார்.
[தொகு]ஈழத்து இலக்கிய ஆய்வு

ஈழத்து படைப்பிலக்கியங்கள் பலவற்றை ரஷ்ய மொழியில் பெயர்த்திருக்கிறார்.

இலக்கியப் படைப்புகள்

தமிழகத்தில் தமிழரின் தொன்மை, நம்பிக்கைகள், சடங்குகள், போன்றவற்றை ஆராய்ந்து ருஷ்ய மொழியில் அரிய நூல் ஒன்றினையும் வெளியிட்டார்.

ஆதவனின் என் பெயர் ராமசேஷன் என்ற நாவலை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தார். இது ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.