ஜோகான் பிலிப் பப்ரிஷியஸ்

பேராசிரியர் எ. சிட்னி சுதந்திரன்


ஜோகான் பிலிப் பப்ரிஷியஸ் (Johann Phillip Fabricius) என்பவர் லுத்தரன் சபையைச் சேர்ந்த ஒரு கிறித்தவ மத போதகர். ஜெர்மன் நாட்டில் கிலிபெர்க் (Kleeberg) என்ற ஊரில் 22-01-1711ல் பிறந்த இவர் யூறா (Jura) மற்றும் ஹாலே (Halle) ஆகிய சர்வகலாசாலைகளில் பயின்று 28-10-1739ல் கிறித்துவ மத போதகர்களுக்கான குரு பட்டம் பெற்றார். அதன் பிறகு இந்தியாவில் கிறித்தவ சமயத்தை வளர்க்கும் நோக்கத்துடன் அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார்.

இறைப்பணி

1740 ஆம் ஆண்டு, செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று தரங்கம்பாடி வந்து சேர்ந்த இவர் தரங்கம்பாடியில் 1742 ஆம் ஆண்டு, டிசம்பர் 4 ஆம் தேதி வரை கிறித்தவ மதப்பணிகளைச் செய்து வந்தார். அதன் பிறகு தரங்கம்பாடி லுத்தரன் சபையைச் சேர்ந்த குருக்கள் இவரை சென்னையில் நடத்தி வந்த ஊழியத்திற்கு இவர் தலைமைப் பொறுப்பேற்றார். அன்று முதல் 49 ஆண்டுகள், அதாவது அவருடைய மரணக்காலம் (23-01-1791) வரை சென்னையில் கிறித்தவ சமயத் தொண்டாற்றினார்.

சென்னையில் இவருடைய சபையில் பல்வேறு நாட்டினர் இருந்ததால், அவர்களிடையே பிரசங்கம் செய்வதற்காக ஜெர்மன், டச்சு, போர்ச்சுக்கீசியம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளையும் கற்றறிந்து, இந்த ஐந்து மொழிகளிலும் பிரசங்கம் செய்தார். இந்த சபை பிரசங்கம் தவிர, வெளி ஊர்களுக்கும் சென்று பல நாட்கள் தங்கியிருந்து கிறித்தவ சமயப் பணியை திறம்படச் செய்து வந்தார்.

எளிமை வாழ்க்கை

Sacred to the memory
Of
Johann Phillip Fabricious
Born on 22–1–1711 at Kleeberg, Germany.
Ordained on 26–10 -1739, arrived at Tranquebar
On 8 – 9 –1740, Took charge of Madras Mission Station
on 4 –12 –1742 and laboured as Missionary in
Purasawalkam over 49 years. Died on 23 –1–1791.
His mortal remains rest at the Church yard of
St. Mathias Church, Vepery, Madras – 7.
A great scholar, affectionately called as Ascetic Priest
(சந்நியாச குரு), Author of the first Lexicon in Tamil.
Translated and compiled our Hymn book, Translated the
whole Bible for the first time in Tamil and printed it in 1772.
This tablet is erected by this grateful congregation on 4-12-1991.
“உங்களுக்குப் பராபரனுடைய வசனத்தைச் சொன்ன
உங்கள் வழிகாட்டிகளை நினையுங்கள்” எபிரேயர்: யந: எ.

என்று இவரைப் பற்றிய செய்திகளை, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள “அற்புதநாதர்” லுத்தரன் ஆலயச் சுவரிலுள்ள கல்வெட்டில் இன்றும் காண முடிகிறது.பப்ரிஷியஸ் ஐயர் மிகவும் அமைதியான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். இவர் பொது விஷயங்களில் தலையிடுவதில்லை. மேலும் தனக்கென சிக்கனமான ஒரு வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டு, தன்னுடைய உடைகளைத் தானே துவைத்து, உலர்த்தி அணிந்து வந்தார். ஆகவே இவரை “சன்னியாசி குரு” என்று அழைத்தார்கள். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த இவர் மிஷனின் பொருளாளராக இருந்தபடியால், பலரும் இவரிடம் பணத்தைக் கொடுத்திருந்தனர். இவர் தேவபக்தியிலும், கல்வியிலும் ஒரு சிறந்த மகானாயிருந்த போதிலும், நிர்வாகத்தில் விவேகமற்றவராயிருந்தார். அதனால், அயோக்கியனான ஒரு உபதேசியாரின் பேச்சைக் கேட்டு பெரும் பணத்தை வட்டிக்குக் கொடுத்து லாபம் சம்பாதிக்கும் காரியத்தில் தோல்வியடைந்தார். இதனால் இவரின் வாழ்நாளின் கடைசி 13 வருடங்களில் அடிக்கடி சிறை செல்ல வேண்டியதாயிருந்தது.

தப்பியோட்டம்

1746ல் பிரான்ஸ் நாட்டினர் சென்னையைக் கைப்பற்றினர். இதனால் ஜெர்மானியரான பப்ரிஷியஸ் ஐயர் பழவேற்காட்டுக்குத் தப்பியோட வேண்டியதாயிற்று. இவர் திரும்பி வருவதற்குள் இவர் கட்டிப் பராமரித்து வந்த சில பள்ளிக்கூடங்கள் கத்தோலிக்கக் குருக்களால் கையகப்படுத்தி அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டனர். இதனால் பள்ளிக் குழந்தைகள் கலைந்து போயினர்.

இதே போல் 1757, 1767, 1780 ஆகிய ஆண்டுகளில் பப்ரிஷியஸ் ஐயர் தன் இருப்பிடத்தை விட்டு அகன்று வேறு இடங்களில் அடைக்கலமாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் யுத்தத்தினால் ஏற்பட்ட பஞ்சங்களால் இவரும், இவருடைய சபையாரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வேதாகம மொழிபெயர்ப்பு

தமிழில் இலக்கியங்களையும், செய்யுட்களையும் அதிகம் கற்றறிந்த இவர் 9,000 சொற்கள் கொண்ட ஆங்கில-தமிழ் அகராதி ஒன்றை எழுதி வெளியிட்டார். அதன் பிறகு வேதாகமத்தில் சீகன்பால்க் மொழிபெயர்ப்பு சரியில்லாத காரணத்தாலும், சூல்ச் ஐயரின் மொழிபெயர்ப்பில் அதிகமான பிழைகள் காணப்பட்டதாலும், நல்லதொரு மொழி நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக ஒரு தமிழ் வேதாகமம் சபையாருக்குத் தேவை என்பதை உணர்ந்து 1752ல் வேதாகம மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கி 20 ஆண்டுகள் பொறுப்போடும் பக்தியோடும் செயல்பட்டு 1772ல் தமிழ் வேதாகமம் ஒன்றை உருவாக்கினார். இந்த வேதாகமம் தரமான, பிழைகள் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்காக பிராமணர்கள், சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் யாவரையும் கூடச் செய்து தான் மொழிபெயர்த்த பகுதியை உபதேசியார் மூலம் வாசித்துக் காட்டச் சொல்லுவார். அவர்களுக்கு விளங்காதது ஏதாவது இருந்தால் அதைத் திருத்தி,நல்ல ஒரு மொழிபெயர்ப்பை உருவாக்கினார். இதைக் கடைசியாக தரங்கம்பாடியிலுள்ள சீகிலின் (Zeglin) ஐயருக்கும், தானியேல் என்பவருக்கும் அனுப்பி பரிசீலிக்கச் செய்தார்.

1772ஆம் ஆண்டு, சென்னை கிறிஸ்து மார்க்க கல்வி அபிவிருத்திச் சங்க (S P C K) அச்சகத்தில் பப்ரிஷியஸ் மொழிபெயர்த்திருந்த புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டது. வேதாகமத்தில் ஒத்த வாக்கியக் குறிப்புகள் பக்கங்களின் கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டிருந்தன.

புதிய ஏற்பாடு முடிந்ததும், பப்ரிஷியஸ் பழைய ஏற்பாட்டு வேலையைத் தொடங்கினார். முந்தைய மொழிபெயர்ப்பில் அவருக்குத் தேவையான அனுபவமும், மொழிபெயர்க்கும் திறனும் வளர்ந்திருந்ததால் மொழிபெயர்ப்பு வேலையை முன்னிலும் சிறப்பாகச் செய்தார். அதனால் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பை விட பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு அதை விட சிறந்ததாக அமைந்தது.

இது குறித்து ஹூப்பர் ஐயர் (J.S.M. Hooper) என்பவர் குறிப்பிடும் போது, “வேத மொழிபெயர்ப்பின் சரித்திரத்திலே பப்ரிஷியஸ் செய்து முடித்த வேலை அரும் பெரும் செயலெனப் பாராட்டப்பட வேண்டும்” என்றார்.

இந்த மொழிபெயர்ப்பு “பொன் மொழிபெயர்ப்பு” (Golden Version) என்று பலராலும் பாராட்டப் பெற்றது. இந்த மொழிபெயர்ப்பு இன்று வழக்கில் இல்லாவிடினும் இதற்குப் பின் வந்த எல்லா மொழிபெயர்ப்புகளுக்குள்ளும் இதன் தாக்கம் திருத்தப்பட்ட வாசகங்களாய் புதைந்து கிடக்கிறது என்பது உண்மை.

பழைய ஏற்பாடு பாகம் பாகமாய், நிறைவு பெற பெற, அச்சிடப்பட்டது. 1777இல் ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரையும், 1782இல் ரூத் முதல் யோபு வரையும், 1791இல் சங்கீதங்கள் முதல் உன்னதப்பாட்டு வரையும், 1796இல் தீர்க்கதரிசன நூல்களும் அச்சிடப்பட்டன.

முதல் நீண்ட வசன நடை

பப்ரிஷியஸ் ஐயர் தமிழில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ வேதாகமம் தான் தமிழ் மொழியின் வசன நடையின் ஆரம்ப காலத்தில் முதலில் வெளிவந்த பெரிய வசன நடை தமிழ் நூலாகும்.பப்ரிஷியஸ் ஐயருடைய மொழிபெயர்ப்புக்குப் பின் வேறுபல மொழிபெயர்ப்புகள் வந்த போதிலும் “தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையார்“ இன்றளவும், அதாவது சுமார் 210 ஆண்டுகளுக்கும் மேலாக பப்ரிஷியஸ் ஐயருடைய பிழைகள் நீக்கப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இன்று தமிழ் சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் உபயோகிக்கும் “கிறிஸ்தவத் தமிழுக்கு” பப்ரிஷியஸ் ஐயர் மொழிபெயர்ப்பே ஆதாரமாக விளங்குகிறது. இன்றும் தென்னாட்டுத் தமிழ்க் கிறிஸ்தவ சபைகளில்,பப்ரிஷியஸ் ஐயர் தமிழில் மொழிபெயர்த்த அல்லது உருவாக்கிய பல “ஞானப்பாட்டுக்கள்” அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சிற்றாலயம்

ஆர்மீனியா நாட்டைச் சேர்ந்த முதன்மை வியாபாரியும், செல்வந்தரும், கத்தோலிக்கருமான கோஜா பெட்ரஸ் உஸ்கன் (Coja Petrus Uscan) என்பவர் 1730 ஆம் ஆண்டில் தன் சொந்த வழிபாட்டிற்காக சென்னையில் ஒரு சிற்றாலயத்தைக் (Chapel Nossa Senhora de milagres / Chapel of Our Lady of Miracles) கட்டினார். அவர் 1751 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காலமானார். அவரின் உடல் இந்த சிற்றாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சிற்றாலயம் அவரின் மறைவுக்குப் பிறகு சென்னை கிறிஸ்தவ கொள்கை பரப்பும் சங்கத்திடம் (SPCK) ஒப்படைக்கப்பட்டது.அதுமுதற் கொண்டு 1825 ஆம் ஆண்டு வரை தரங்கம்பாடி மிஷனைச் சேர்ந்த லுத்தரன் பாதிரியார்கள் ஆலயவழிபாட்டை நடத்தி வந்தனர். ஆங்கிலேய மிஷனரிகளை அவர்கள் சென்னைக்குள் அனுமதிக்கவில்லை.

மறைவு

23-01-1791ல் பப்ரிஷியஸ் ஐயர் இறந்தபோது அவருடைய உடலை லுத்தரர்கள் அவர்கள் ஆளுகையில் இருந்த இந்த சிற்றாலய வளாகத்தில் நல்லடக்கம் செய்தனர்.

கல்லறை

1826ல் அருள்திரு. ரிச்சர்டு வில்லியம் மூர்சம் (Rev. Richard William Moorsom) என்ற முதல் ஆங்கிலேயப் பாதிரியார் சிற்றாலயத்தின் பொறுப்பினை ஏற்றார்.அதுமுதற் கொண்டு அந்த ஆலயத்தில் ஆங்கிலிக்கன் முறைப்படி ஆங்கிலத்தில் வழிபாட்டு முறை இன்றுவரை பின்பற்றப்படுகிறது. மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த ஆலயக் கட்டிடத்தை சென்னை கிறிஸ்தவ கொள்கை பரப்பும் சங்கமும் (SPCK) ஆங்கிலேய அரசாங்கமும் இணைந்து இடித்து விட்டு அந்த இடத்தில் ஒரு புதிய ஆலயத்தை 1828 ம் ஆண்டு கட்டி முடித்து, 1842ஆம் ஆண்டில் ஆலயப் பிரதிருஷ்டை செய்தனர்.

இதனால் ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் இருந்த அனைத்துக் கல்லறைகளையும் பழுதுபார்த்து புதுப்பித்தனர். இப்படி புதுப்பிக்கபபட்ட கல்லறைகளில் பப்ரிஷியஸ் ஐயர் கல்லறையும் ஒன்று. இக்கல்லறையின் மேல் ‘Johann’ என்ற அவரது ஜெர்மன் பெயர் ‘John’ என்று ஆங்கிலமாக்கப்பட்டிருக்கிறது.

சென்னை, வேப்பேரியில் உள்ள ரிதர்டன் சாலையில் (Ritherdon Road) இருக்கும் புதுப்பிக்கப்பட்ட இந்த சிற்றாலயம் தற்போது “தூய. மத்தியாஸ் ஆலயம்” (St. Matthias Church) என்றும், “தி இங்கிலிஷ் சர்ச்” (The English Church) என்றும் அழைக்கப்படுகிறது.அதோடு அவரைப்பற்றிய முக்கிய செய்திகள் எதுவும் குறிப்பிடப்படாமல் விடுபட்டுப் போயிருப்பதோடு, அவரது கல்லறை ஒரு “சரித்திரச் சான்றாக” (‘For Historical Records’) மட்டும் அங்கு இருப்பது வருந்தத்தக்க ஒரு நெஞ்சைக் கிள்ளும் செய்தியாகும். சென்னை, வேப்பேரியில் ரித்தர்டன் சாலையில் (Ritherdon Road) இருக்கும் சென்னை சி எஸ் ஐ திருமண்டலத்துக்கு சொந்தமான “தூய. மத்தியாஸ் ஆலயம்” (St. Matthias Church) அல்லது, “தி இங்கிலிஷ் சர்ச்” (The English Church) தான், 1828ஆம் ஆண்டு இடித்து கட்டப்பட்ட சிற்றாலயமாகும்!

கல்லறை வாசகம்

சென்னை வேப்பேரியிலுள்ள தூய. மத்தியாஸ் ஆலய வளாகத்திலுள்ள பப்ரிஷியஸ் ஐயரின் கல்லறையின் மேல் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

Blessed are the Dead who die in Lord
The Rev. John Philip Fabricious
Died : 1791
Well done thou good and faithful servant
Erected by
The Parishioners of
St. Matthias Church
For Historical Records.