வீரமா முனிவர்http://tawp.in/r/4vj



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1746) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - Costanzo Giuseppe Beschi என்பதாகும். (ஆங்கிலம் - Constantine Joesph Beschi - கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறிஸ்துவின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

இளமை


இளமையிலே எளிய வாழ்வை விரும்பிய இவர்; இறையுணர்வு மிக்கவராக இருந்து; 18 வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். உலக மொழிகள் கற்கும் ஆர்வத்தால் 30 வயதினுள் கிரேக்கம், லத்தீன், போத்துக்கீசம், பிரன்சு, ஜேர்மன், ஆங்கிலம், ஈரானிய மொழியுட்பட 9 மொழிகளில் தேர்ச்சியுடையவரானார்.

இவர் 5 வருடங்கள் இலக்கண ஆசிரியராகக் பணிபுரிந்து; 4 ஆண்டுகள் கிறித்தவ வேதத்தைக் கற்று குருவாக திருநிலைப் படுத்தப்பட்டார்.

இந்தியாவில்

இவர் லிஸ்பனில் இருந்துபுறப்பட்டு 1710 ஜூனில் மறைபரப்புப் பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார்.

வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை 


சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்ல உத்தேசித்து, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.



1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.

இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்.

வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றிய மாற்றுக் கருத்து


முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840இல் வெளியிட்டார். அவர் 1840இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843இல் அப்பாவுபிள்ளை பதிப்பித்தார். எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றி அச்சான முதல் நூல் இதுவே. ஆனால், இதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார். 

வீரமாமுனிவரின் வரலாற்றை எழுதிய முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை வீரமாமுனிவர் தொண்டும் புலமையும் என்னும் ஆய்வுநூலில் ச. இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார் . முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் தத்துவ போதகர் என்று சிறப்புப்பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி என்னும் மறைபரப்பாளர் பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு ஏற்றியுரைத்ததே என்று இராசமாணிக்கம் ஆய்வினடிப்படையில் நிறுவியுள்ளார். 

தத்துவ போதகர் 1606இல் மதுரை வந்து ஐம்பது ஆண்டுகளாக உழைத்தபின் 1656 சனவரி 16ஆம் நாள் மயிலாப்பூரில் உயிர்துறந்தார். அவருக்குத்தான் தத்துவ போதகர் என்ற பெயர் இருந்தது. வீரமாமுனிவரையும் தத்துவ போதகரையும் பிரித்தறியாமல் எழுந்த குழப்பத்தை இராசமாணிக்கம் பின்வருமாறு விவரிக்கிறார்:

வீரமாமுனிவரே தமிழ் நாட்டில் செல்வாக்கோடு வழங்கி வருவதாலும், தத்துவ போதகர் யார் என்றுகூடப் பொதுமக்கள் அறியாததாலும், தத்துவபோதகர் ஆற்றிய தொண்டு முதலிய எல்லாம் வீரமாமுனிவர் மீது ஏற்றிக் கூறுவதோடு வீரமாமுனிவரையும் தத்துவ போதகர் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சைவ உணவையே கையாண்டது, அன்றாட நோன்பு இருந்தது, உயர்ந்த ஆடைகளையே அணிந்தது, பூணூல் போட்டது, கொடியுடைய கோல் ஏந்திச் சென்றது, பல்லக்கில் சென்றது, வடமொழியிலும் தெலுங்கிலும் தமிழில்போல் பாண்டித்தியம் பெற்றது, முதல் முதலாகத் தமிழிலும் தெலுங்கிலும் உரைநடை நூல்கள்.இயற்றியது, இவைபோன்ற பலவற்றைக் கையாண்டவர் தத்துவ போதகர். இவற்றை எல்லாம் வீரமாமுனிவர் செய்ததாக முத்துச்சாமிப் பிள்ளையும் அவரைப் பின்பற்றிய பல ஆசிரியர்களும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது...கொடியுடைய கோலோ, பூணூலோ வீரமாமுனிவர் மேற்கொள்ளவில்லை. அவற்றை அணிந்தவர் தத்துவ போதகரே. தத்துவ போதகர் வேறு, வீரமாமுனிவர் வேறு. ஆகவே வீரமாமுனிவரைத் தத்துவ போதகர் என்று அழைப்பதோ, தத்துவ போதகர் படத்தை வீரமாமுனிவரின் உருவமாகக் காட்டுவதோ பொருத்தமற்றது.

 பெயர்மாற்றம்

மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

 தமிழ்ப் பணி

இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்நூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.

தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.

சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார். அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர். தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதையாக இருந்தது. மக்கள் படிதறிய எளிதில் முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.

பிற தமிழ் படைப்புகள்

  • கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.
  • திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
  • திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
  • 1728-இல் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இக் நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
  • காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.